ஒட்டக்கூத்தர்

தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்றவர் ஒட்டக்கூத்தர்

புலவர் சிறைவாசம்

குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்ததும் பல விதமான சீர்வரிசைகளுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன். தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையுமின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.

புகழேந்திப் புலவர் சிறையிலிந்த பொழுது ஒரு நாள் அவர் சிறைக்கட்டடத்தின் மேல் மாடியில் நின்றுகொண்டு தெருவைப் பார்த்தவண்ணமிருக்கையில், குலோத்துங்க சோழன் ஒட்டக்கூத்தருடன் அத்தெருவழியே நகர்வலம் வந்துகொண்டிருந்தான். புகழேந்திப்புலவரைப் பார்த்ததும் மன்னன் பரவசமடைந்து ஒட்டக்கூத்தரை நோக்கி, "பார்த்தீரா, அவர்தான் புகழ்மிக்க புகழேந்திப் புலவர்" என்றுரைக்க ஒட்டக்கூத்தர், "வேங்கைப்புலி வரக்கண்டால் மான் நிற்காமல் ஓடிவிடும், வற்றி உலர்ந்த காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும், சுறறா மீன் வரக்கண்டால் மற்ற சிறிய மீன்கள் அனைத்தும் அஞ்சி ஓடும், சூரியனைக் கண்டால் பனி மறைந்துவிடும்" எனும் பொருள்பட,

மானிற்குமோவந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்குமோவவ் வெரியுந் தழல்முன் கனைகடலின்
மீனிற்குமோவவ் வெங்கட் சுரவமுன் - வீசுபனி
தானிற்குமோவக் கதிரோனுதயத்தில் தார்மன்னனே


என்ற பாடலைக் கூறினார். இதைக்கேட்ட புகழேந்திப் புலவர் அரசனை நோக்கி, "மன்னா, இபபடலை நான் ஒட்டிப்பாடவா? வெட்டிப்பாடவா?" என்று கேட்டார். புலவர்களுக்குள் சண்டை வரரக்கூடாது என்ற எண்ணத்தில், "ஒட்டியே பாடுங்கள், வெட்டிப்பாட வேண்டாம்" என்று மன்னன் கூறவே, "இப்பாடலில் முதலில் வரும் மான், உலர்ந்தத செடிகொடிகள், சிறு மீன்கள், பனி ஆகியவை ஒட்டக்கூத்தனென்றும், பின்ன் வரும் வேங்கை, தீ, சுறா, சூரியன் முதலானதெல்லாம் தானென்றும் பொருள்பட,

மானவன்நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்த
கானவன்நானவ் வெரியுந் தழலும் கனைகடலின்
மீனவன்நானவ் வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவவன்நானக் கதிரோ னுதயமுந் தார்மன்னனே.


எனும் பாடலைக்கூறினார்.

குலோத்துங்க சோழன் திருமணம்

குலோத்துங்கனுக்குத் தந்தையில்லாததால் அவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பை அவனது குரு ஒட்டக்கூத்தர் ஏற்றார். பாண்டிய மன்னனின் மகள் மிகவும் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார் ஒட்டக்கூத்தர். பாண்டிய மன்னன் ஒட்டக்கூத்தரின் வேண்டுகோளைக் கேட்டதும், "எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன தகுதியிருக்கிறதென்றும், சோழநாடு பாண்டிய நாட்டை விட எவ்வாறு சிறந்ததது என்றும் கூறுங்கள் என வினவ,

ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரர்க்குள் வீரனொரரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே


என்ற பாடலைப் புனைந்து கூறினார். இதன் பொருள், "சோழ மன்னர்கள் தரிக்கும் ஆலம்பூ மாலைக்குப் பாண்டடிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம்பூ மாலை ஈடாகுமா?, சோழர்களின் குலம் சூரிய குலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம், சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா? வீரர்களுள் சிறந்தவன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன்கொடியைத் தரித்த பாண்டியனா? சோழநாட்டின் தலைநகரான அலைகடல் ஆர்ப்பரிக்கும் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான கொற்கை நகர் ஈடாகுமா? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?" என்பதாகும்.

இதனை செவிமடுத்த பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவர் புகழேந்தி அவர் கூற்றுக்கெதிராக,

ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானே
ஒப்பரிய திருவிளையாட் டுறந்ததையிலோ அம்மானே
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவைபபரந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே


என்ற பாடலைக் கூறினார். இதன் பொருளாவது, "அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையிலா? அல்லது சோழ நாட்டிலுள்ள நேரி மலையிலா? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் உறந்தையிலா நடந்தன? மஹாவிஷ்ணு மீனாகத்தான் அவடதாரம் எடுத்தாரேயன்றிப் புலியாகவா அவதரம் எடுத்தார்? சிவபெருமானின் ஜடாமுடியில் அணியப்படுவது சந்திரனேயன்றிச் சுரியனா? புலவர்கள் இயற்றிய நூல்களின் பெருமையை சங்கப்பலகை நீரை எதிர்த்துக் கரைசேந்து உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்ச்சி வையை ஆற்றில்தான் நடந்தததேயன்றிக் காவிரி ஆற்றிலா? பேய் பிடித்தவர்களைக் காப்பாற்ற, பேயை விரட்டப் பயன்படுவது வேப்பமரத்தின் இலைதானேயன்றி ஆலிலையா? ஒரு முறை கடல் (பரவை) பாண்டிய மன்னரைப் பணிந்ததாம், அது சோழ மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்கலின் பராக்கிரமம் சொல்லற்கரிது" என்பதாகும்.

தமிழைத் தவறாக உரைக்காதீர்கள்

சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார் அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்வதில்லை.

பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர் பிற புலவர்களை வாதிற்கு அழைத்து, வாதில் வர்கள் தோற்றால் அவர்களது காதை அறுத்துவிடுவாராம். மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.

இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டுப் போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எடுத்துரைக்கிறது (இடித்துரைக்கிறது)

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே


என்ற செய்யுள்.

பெட்டகம்">Archives

February 2007 March 2007 May 2007

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org

Subscribe to Posts [Atom]