ஒட்டக்கூத்தர்

தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்றவர் ஒட்டக்கூத்தர்

தாள் திறந்தது

ஒட்டக்கூத்தரின்மேல் அரசிக்கு ஏன் இத்தனை கோபம் என்று எண்ணிப் பார்த்த மன்னவன் புகழேந்தி சிறையிலிருப்பதை நினைவுகூர்ந்தான். தான் பெரிய தவறிழைத்துவிட்டோமென்று மனம் வருந்திய மன்னன் உடனடியாகப் புகழேந்திப் புலவரை சிறையிலிருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, அரசியின் பிணக்குத்தீர உதவும்படி வேண்டினான். அரசனின் வேண்டுகோளை ஏற்ற புகழேந்தி அரசியின் அந்தப்புரத்துக்கு வந்தார். புகழேந்தி வருவதை அறிந்த அரசி ஓடோடிச்சென்று கதவைத் திறந்து தம் மதிப்பிற்குரிய குருநாதரை வரவேற்று அமரச்செய்தாள்.

அரசியின் மனம் சமாதானமாகும் விதமாக ஆறுதல் கூறிய புகழேந்தி, "நூலிழையொன்றை இரண்டாய் வகிர்ந்ததுபோன்ற மெல்லிய இடையுடையவளும், பொற்குழைகள் இரண்டை ஏந்தியவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஆரணங்கே, மழை பொழிவதுபோல் இரண்டு கைகளாலும் பாணங்களைத் தன் எதிரிகள் மேல் எரியும் ஆற்றல்பெற்ற குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வருகையில் அவன் செய்த ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்வது உயர்குடியில் பிறந்த உனக்கு சிறப்பைத் தரும்" எனும் பொருள்பட,

"இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே"


எனும் பாடலைக் கூற, அரசியும் பிணக்குத் தீர்ந்தாள். ஒட்டக்கூத்தருக்காகப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

இந்த சொற்றொடருக்கு உண்மையான பொருள் பலருக்குத் தெரியாது. இதன் பின்னணியில் ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம் உள்ளது.

பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலுருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அரசன் இது பற்றி அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் எனக்கொண்ட அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள்.

அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,

"மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்" எனும் பொருள்பட,

"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"


எனும் பாடலைக்கூறவே,

பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.

இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.

பெட்டகம்">Archives

February 2007 March 2007 May 2007

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org

Subscribe to Posts [Atom]