ஒட்டக்கூத்தர்

தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்றவர் ஒட்டக்கூத்தர்

நளவெண்பா அரங்கேற்றம்

புகழேந்திப் புலவர் மஹாபாரதக் கதையின் உபகதையான நளன் சரித்திரத்தை வெண்பாக்களாக இயற்றி, நளவெண்பா எனும் வடிவில் அரசன் குலோத்துங்க சோழனுடைய ஆக்ஞையின்பேரில் அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின்போது அதில் முக்கியப் பங்கு வகித்த ஒட்டக்கூத்தர் இடையிடையே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் வேண்டுமென்றே குற்றங்குறை கூறி வாங்கிக்கட்டிக்கொண்ட கதை மிகவும் ஸ்வாரஸ்யமானது.

நளவெண்பாவில் மாலைக்காலத்தை ஒரு அழகிய மங்கையாய் வர்ணிக்கும் விதமாய் அமைந்த பாடலொன்று வருகிறது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

மல்லிகை மலரை வெண்சங்காகப் பாவித்து அதில் தேனருந்த வரும் வண்டு ஊத, மன்மதனின் கரும்பு வில்லினால் எய்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் மேனி பரவசமடைய, முல்லை மலர்களாலான மெல்லிய மாலையதனைத் தோளில் அணிந்துகொண்டு அம்மாலை அசையும் விதமாக மெல்ல நடந்து வந்தாளாம் அந்திப் பொழுதெனும் இளநங்கை.

"சங்கை ஊதுபவர்கள் அதன் சூத்தைத்தான் (பிற்பகுதியை) வாயில் வைத்து ஊதுவார்களே தவிர, சங்கின் வாய்ப் பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்ல. ஆனால் வண்டு மலரின் வாய்ப்பகுதியின் வழியாகத்தானே தேனருந்துகிறது. ஆகவே இவ்வுவமானம் தவறு. பாடலில் பொருட்குற்றமுள்ளது, அதனால் இதை ஏற்பதற்கில்லை." என்று ஒட்டக்கூத்தர் மறுப்புத் தெரிவித்தார்.

"கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமா? நீர்தான் சொல்லும்" என்று புகழேந்திப் புலவர் பதிலுக்குக் கேட்க ஒட்டக்கூத்தர் பதிலேதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விட்டார்.

இன்னுமொரு பாடலில் சந்திரனும் விண்மீன்களும் நிறைந்த வானத்தைக் குறித்துப் பாடுகையில் புகழேந்தி கூறுகிறார்:

செப்பிளம் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங்கொண்ட குளிர்வானை எப்பொழுதும்
மீன்பொதித்து நின்ற விசும்பென்பதென்கொலோ
தேன்பொதித்த வாயாற்றெரிந்து

"செம்பினைப் போன்ற இளம் கொங்கைகளுடைய பெண்களே, சந்திரனின் கதிர்கள் பட்டதால் உண்டான கொப்புளங்களான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்ந்த வானத்தை விண்மீன்கள் பொதித்த வானம் என்று தங்கள் தேன்போன்ற சொற்களைப் பேசும் வாயால் தெரிந்தே சொல்வதேனோ?"
எனக் கேட்கிறார்.

"வானத்தில் கொப்புளங்கள் உண்டானால் அதிலிருந்து சீழாவது சிலைநீராவது வடிய வேண்டுமே" அதனால் இப்பாடல் பொருட்குற்றமுள்ளது. ஏற்க முடியாது என ஒட்டக்கூத்தர் மறுதலித்தார்.

"சீழ் வடியவில்லை, சிலைநீர் வடிகிறது, அதுதான் விண்ணிலிருந்து பெய்யும் பனி" எனப் புகழேந்தி மறுமொழி கூறவே ஒட்டக்கூத்தர் கப்சிப்பென்று அடங்கிவிட்டார். நளவெண்பா அரங்கேற்றமும் இனிதே நிறைவேறியது.

பெட்டகம்">Archives

February 2007 March 2007 May 2007

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org

Subscribe to Posts [Atom]